திருபாய் அம்பானி வாழ்க்கை வரலாறு | Dhirubhai Ambani History in Tamil

 

     திருபாய் அம்பானி 


     மும்பையில் ஒற்றை அறைகொண்ட மச்சு வீட்டில் குடியிருந்த ஒருவர், தான் மரணிக்கையில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகவும் உயருவார் என்று எவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

     வெறும் 50,000 ரூபாய் முதலீட்டில் தொழில்துவங்கப்பட்டுஇன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி’ என அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். 

     மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும்’ தேர்வு செய்யப்பட்டார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை அளவிடக்கூடிய அளவில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, திருபாய் அம்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி வாருங்கள் காண்போம்.

சோதனயை சாதனையாக்கியவர்

     தனது 16 வயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் அம்பானி. இதனால் இவரது வலது கரம் செயலிழந்தது. இவர் என்றுமே இயலாமை என்ற வார்த்தையைப் பற்றி நினைத்தது இல்லை. தனது குறைகளை துச்சமாய் நினைத்து, வெற்றியை மட்டும் தனது இலக்காய் நிர்ணயித்துப் பயணித்தார். “உன் கனவுகளை நீ நனவாக்கத் தவறினால், பிறர் அவர்களது கனவுகளை நிறைவேற்ற உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று கூறிய அம்பானி, தனது கனவுகளை விரைந்து நனவாக்கினார்.

ஆனால் தொடர்ந்து கனவு காண்பதை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை.

பிறப்பு

     திருபாய் அம்பானி அவர்கள், 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர மோத் குடும்பத்தில் பிறந்தார்.

பிறந்த ஆண்டு: 28 டிசம்பர், 1932

பிறந்த இடம்: குஜராத் மாநிலத்திலுள்ள குகஸ்வாடா, இந்தியா

பணி: தொழிலதிபர்

இறந்த ஆண்டு: ஜூலை 06, 2002

ஆரம்ப வாழ்க்கை

   ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த அவர், பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. விலையேற்றங்களை முன்னரே கணித்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவதில் இவர் வல்லவர். சற்றே நிதானமாக வியாபாரம் செய்பவரான தமானி, அம்பானிக்கு ஈடுகொடுக்க முடியாததால் மஜின் கூட்டு நிறுவனம் பிரிய நேரிட்டது. அப்பிரிவே ரிலையென்ஸ் என்னும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டது.

வெற்றியை நோக்கிய பயணம்

     1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977 ஆம் ஆண்டு துவங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், 1977 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.

   பல பிரச்சனைகள் வந்தாலும், முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் துவங்கிய அவர், தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.

குடும்ப வாழ்க்கை

    திருபாய் அம்பானி அவர்கள், கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

தன்னலத்திலும் பொதுநலம்

    அம்பானி தான் மட்டும் உயர வேண்டும் என்று நினைத்தவரல்ல. தன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முதற்கொண்டு பணிபுரியம் ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தவர் அம்பானி. ஊழியர்களின் சம்பளத்தை சீராக உயர்த்திக்கொண்டே இருப்பார். 1986ல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்குஉலகமே வியந்து பார்க்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரம்மிக்கவைத்தனர். பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார். 1990களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம். கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் சக்தியாய் வளர்ந்து நிற்கிறது ரிலையன்ஸ்.

 இறப்பு

    உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது ஒற்றை மூளையால் செதுக்கிய திருபாய் அம்பானி, தனது மூளை ஒத்துழைக்காமல் போக மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69வது வயதில் 2002-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் இயற்கை எய்தினார்.

    உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி அவர்கள். குறிப்பாக சொல்லப்போனால், திறமையும் உழைப்பும் தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.



 

 

 

 

1 comment: