பல்வேறு போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். தைரியமும் விவேகமும் கலந்த போர் முறைகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் கொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து, ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியை அடியோடு ஒழிக்க எண்ணியவர். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்டெடுக்க மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்.
கொங்கு மண்ணில் தோன்றி, வீரத்திற்கு அடையாளமாக தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் அழியாமல் நிலைப்பெற்றிருக்குமாறு செய்த தீரன் சின்னமலை அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போர்கள் பற்றி வாருங்கள் கண்போம்.
தீரன் சின்னமலையின் தாேற்றம்
தீரன் சின்னமலை அவர்கள், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் காங்கயத்திற்கு அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ‘பழையக்கோட்டை மன்றாடியார் பட்டம்’ பெற்ற மதிப்புமிகு குடும்பத்தில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். தீரன் சின்னமலை அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும்.
ஆரம்பகால வாழ்க்கை
தீரன் சின்னமலை அவர்கள் தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான சிலம்பு, வில்வித்தை, குதிரையேற்றம் மட்டுமல்லாமல் நவீன போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். தற்காப்புகலைகள் அனைத்திற்கும் மொத்த உருவமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்கள் தான் கற்ற கலைகள் அனைத்தையும் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார். அதுமட்டுமல்லாமல் கொங்குப்பகுதியில் குடும்ப மற்றும் நிலப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தார்.
‘தீரன் சின்னமலை’ பெயரமைந்த காரணம்
தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு, மைசூர் மன்னர் அவர்களின் ஆட்சியில் இருந்தது, திப்புவின் திவான் ‘முகம்மது அலி’ என்பவரால் வரி வசூலிக்கப்பட்டு அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும்.
ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, திவான் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தோடு மைசூருக்குத் திரம்பிக்கொண்டிருந்த போது அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த முகம்மது அலி கேட்ட போது, “சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையில் உள்ள ஓர் சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அதன் பிறகே, அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.
அவமதிப்புக்குள்ளான திவான் சின்னமலைக்கு தக்க பாடம் கற்பிக்க ஒரு படையை அனுப்பினார். அதனை எதிர்த்து தீரன் சின்னமலையின் படையும் போரிட்டன. இருபடைகளும் நொய்யல் ஆற்றங்கரையில் மோதின. இதில் சின்னமலையே வெற்றிபெற்றார்.
தீரன் சின்னமலை - திப்பு சுல்தான் கூட்டணி
தீரன் சின்னமலை அவர்கள் வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் தொடர்ந்து வளர்ந்தது. இதில் சிறிதும் விருப்பமில்லாத சின்னமலை, ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்தார். அந்த சமயத்தில், அதாவது டிசம்பர் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டு மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார். திப்பு சுல்தானும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க எண்ணினார்.
இதுவே, தீரன் சின்னமலைக்கும் பெரும் சாதகமாக அமைந்தது. ஆகவே, தீரன் சின்னமலை அவர்கள் தனது நண்பர்களோடு ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் தீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சீரங்கப்பட்டணம், மழவல்லி மற்றும் சித்தேசுவரம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த மூன்று மைசூர் போர்களிலும் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் மாபெரும் சேதத்தை விளைவித்து, வெற்றியை கைப்பற்றியது.
நான்காம் மைசூர் போர்
மூன்று முறை நடந்த மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு கோபமடைந்த ஆங்கிலேயர்கள், பலவிதமான புதிய போர் முறைகளைக் கையாளத் திட்டம் வகுத்தனர். இதன் காரணமாக, திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரின்போது தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார். பிரெஞ்சுக்காரர்களால் பயிற்சியளிக்கப்பட்ட தீரன் சின்னமலை கொங்குமண்டலத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு திப்புவுடன் இணைந்து துணிச்சலுடனும், வீரத்துடனும் அயராது போரிட்டனர். துரதிஷ்டவசமாக, “கன்னட நாட்டின் போர்வாள்” என அழைக்கப்படும் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.
சின்னமலையின் வெற்றிப்பயணங்கள்
திப்பு சுல்தான் அவர்களின் இறப்பிற்கு பிறகு கொங்கு நாட்டில் ஒரு கோட்டையை எழுப்பிய தீரன் சின்னமலை அவர்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார். எனவே அவ்விடம் ‘ஓடாநிலை’ என்றழைக்கப்படுகிறது.
திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் விதமாக, தீரன் சின்னமலைக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் அவரது வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்து, பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் பீரங்கிகள் போன்ற நவீன போர் ஆயுதங்களையும் தயாரித்தார். பின்பு, 1799ல் தீரன் சின்னமலை தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்பு சுல்தானிடம் பணியாற்றிய சிறந்த போர்வீரர்களான அப்பாச்சி மற்றும் தூண்டாஜிவாக் போன்றவர்களை தனது படையில் சேர்த்ததோடு மட்டும் நில்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அருகில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் படைப்பிரிவை தரைமட்டமாக்க எண்ணிய அவர், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். “சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால்”, கோவைப்புரட்சி தோல்வியை சந்தித்தது.
1801ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானியில் உள்ள காவிரிக்கரையில் எதிர்த்த அவர், வெற்றிப் பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்தாற்போல், 1802ல் சிவன் மலைக்கும் சென்னிமலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார். தீரன் சின்னமலை அவர்கள் பிடிபடாமலிருக்க கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டார். 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கினார்.
தீரன் சின்னமலையின் இறுதி வாழ்க்கை
ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்வியடையச் செய்து, அவர்களின் தலைகுனிவிற்கு காரணமாக அமைந்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் தீர்த்துக் கட்ட எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் கூறி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஏற்க வற்புறுத்தப்பட்டபோது அவர்கள் அதற்கு இணங்க மறுத்தனர்.
தீரன் சின்னமலையின் மறைவு
ஜூலை 31, 1805 அன்று சங்ககிரி கோட்டையின் உச்சியில் தீரன் சின்னமலையும் அவரது சகோதர்களும் தூக்கிலிடப்பட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார். அவர் இன்றளவும் பேசப்படுகின்றார் என்றால் “அவர் விதைத்த விதை வழி வந்தவர்கள் பெற்ற வெற்றியே” ஆகும்.
தீரன் சின்னமலை அவர்களின் வீரதீர செயல்களை போற்றும் விதமாக
தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் நினைவு மணிமண்டபம் உள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் ‘தீரன் சின்னமலை மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்திய அரசின் தபால்தந்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை, ஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், ‘தீரன் சின்னமலை அவர்களின் நினைவு அஞ்சல் தலையை’ வெளியிட்டது.
Good
ReplyDeleteStory great
ReplyDeleteStory great
ReplyDeleteதீரன் சின்னமலை கவுண்டர் என்பவர் சாதாரண சாமானிய ஆளாக இருந்து,தனது பாளையத்தை உருவாக்கியவர்,, அவரது ஆவணங்களை ஆங்டகிலேயன் அழித்தான், ஆனால் பத்திரங்களை ஓண்ணும் பண்ண முடியல, கவுண்டர் சாதி வெறியோடு இருக்கிறார் என கூறி முடியாது, அருந்ததியர் சமூகம் இன்றுவரை கவுண்டர் சமூகத்துடன் தான் இணைந்து வாழ்கிறது.... தீரனாரை வாழ்ந்த வீரர்கள் போற்றுவர்
ReplyDeleteகொங்கு வேளாளரை பெருமை
ReplyDeleteகோவையில் தான் தெரியும் அங்கு நீங்க எந்த சாதி என யாரும் கேட்ட மாட்டார்கள்